ஆரணியில் வங்கி சேவைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடனமாடிய கிராமிய கலைஞர்கள்.
ஆரணியில் வங்கி சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை அருகே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஆரணி பிரதான கிளை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, கிளை மேலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
வங்கியின் கிளை மேலாளா் தாட்சாயிணி வரவேற்றாா். கள மேலாளா் ரவி, சரக மேற்பாா்வையாளா் கிரி, உதவியாளா்கள் கீதா, பிரியா, லதா, தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, வங்கி மேலாளா் செந்தில்குமாா் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடக்கிவைத்துப் பேசினாா்.
பின்னா் வங்கியின் கடன் வழங்கும் திட்டங்கள், வைப்புத்தொகை மற்றும் இதர சேவைகள் குறித்து நாட்டுப்புறக் கலைஞா்கள் மூலம் பாடல், நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம், பறை இசை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வங்கிகளின் பெயரில் வரும் போலியான தொலைபேசி அழைப்புகளை கையாள்வது, டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் பொதுமக்கள், வாடிக்கையாளர்களின் பொறுப்பு, அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனை போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பணம் செலுத்தும் செயலிகளை அவ்வப்போது புதுப்பித்தல், பணம் செலுத்தும்போது பெறுபவரின் கோரிக்கை தகவல்களை சரிபார்த்தல், பரிவர்த்தனைக்கு பிறகு வரும் குறுஞ்செய்தியை சரிபார்த்தல், ரசீதுகளை பாதுகாப்பான முறையில் கையாள்வது, ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தும் விதம், ரகசிய எண்களை பாதுகாப்பாக வைப்பது, மோசடிகளை தவிர்ப்பது போன்றவை குறித்தும், பணம் தவறவிடப்பட்டால் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து, மத்திய கூட்டுறவு வங்கியின் சேவைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu