ஆரணியில் 2 -வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி டெண்டர்

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கான டெண்டர்கள் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம், சமுதாயக்கூடம், சிமெண்டு சாலை அமைத்தல், ரேஷன் கடைகள் அமைத்தல் உள்ளிட்ட 11 வளர்ச்சி பணிகள் செய்ய ரூ.1 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக டெண்டர் விட கடந்த மாதம் தேதி அறிவிக்கப்பட்டது.
டெண்டர் விட இருந்த நேரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் டெண்டரை ஓபன் டெண்டராக சீலிட்டு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் ஒப்பந்த புள்ளியை பின்னர் நடத்தப்படுவதாக கூறி ஒத்தி வைத்தனர். அதன் அடிப்படையில் இன்று 2-வது முறையாக டெண்டர் விடும் நிகழ்ச்சி நடந்தது.
அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சங்கர், திருமால், கஜேந்திரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பி.பாபு ஆகியோர் ஓபன் டெண்டர் வைக்கப்பட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்
அதற்கு ஒன்றிய கவுன்சிலர்கள் ஏழுமலை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர், ரவி, ஜெயச்சந்திரன், , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், குன்னத்தூர் செந்தில் உள்பட பலர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த ஒப்பந்த புள்ளிகள் டெண்டர் விடப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என பதில் அளித்தார்.
அதற்கு அ.தி.மு.க.வினர் நாங்கள் டெண்டரை நிறுத்த சொல்லவில்லை, ஓபன் டெண்டர் விட வேண்டும் என்று கூறுகிறோம் என்றனர். பின்னர் சிறிது நேரத்தில் தற்போது நிர்வாக காரணங்களுக்கான டெண்டர் விடுவது ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். டெண்டர் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu