ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரன்

ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரன்
X

ஆரணி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்

ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் என அதிமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களையும், வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

ஆரணி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளில் 12 வது தொகுதி ஆகும், இதில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளது. இதில் செஞ்சி, மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர்.

இத்தொகுதியில் காங்கிரஸ் 7 முறை தனித்து நின்றும் கூட்டணி வைத்தும் வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 முறையும் அதிமுக 2 முறையும் பாமக 2 முறையும் தாமாக மதிமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

தற்சமயம் இந்த 6 தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதிகள் எதிர்கட்சி வசம் உள்ளன. போளூர், ஆரணி அதிமுக வசமும், மயிலம் பாமக வசமும் உள்ளன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கஜேந்திரன் போட்டியிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த விக்ரமனின் மகன் கஜேந்திரன். இவர் இளநிலை பட்டப் படிப்பை படித்துள்ளார். தற்போது கட்டுமான பணிகளை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகனும் உள்ளார்.

அதிமுக கட்சியில் 2008 முதல் 2019 வரையில் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளராக 12 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 2019 முதல் ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். அதே போன்று திருவண்ணாமலை பண்டக சாலையில் தலைவராகவும் இருந்துள்ளார்.

அதிமுக சார்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்