ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்: 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு

ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்: 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு
X

பைல் படம்

ஆரணியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.

ஆரணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் வீட்டின் பூட்டு உடைத்து மர்ம ஆசாமிகள் 22 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 6 லட்சத்தை திருடிச்சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கொசப்பாளையம் அப்பர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோசலை. இருவரும் அமிர்தி மற்றும் வடுக்கசாத்து பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களது வீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு குடியிருப்பவர் குணசேகரன். இவரது மனைவி புஷ்பலதா. மகளிர் சுயஉதவி குழுவில் ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மூர்த்தி மற்றும் அவரது மனைவி, அதேபோல் முதல் மாடியில் வசிக்கும் புஷ்பலதா ஆகியோர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர், மாலை வேலையை முடித்துவிட்டு மூர்த்தி வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதேபோல், புஷ்பலதாவின் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூபாய் 6 லட்சம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்ஐ சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர் தேவிபிரியா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் மூர்த்தி, புஷ்பலதா ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நகைகள் மற்றும் பணம் திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இன்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!