ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் மோசடி

ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் மோசடி
X
ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் உச்ச நடிகர் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகி ஆக உள்ளார்.

இவர் அந்தப்பகுதியில் உள்ள பெண்களிடமும், சிறு வியாபாரிகளிடமும் மாத சீட்டு, வார சீட்டு, தினச்சீட்டு என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சீட்டுகள் நடத்தி வந்துள்ளார்.

சீட்டு கட்டி முடித்தவர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டு பொறுமை இழந்த பொதுமக்கள், அந்த பிரமுகரின் வீட்டு முன்பு குவிந்தனர். அத்துடன் அவரது வீட்டின் கேட்டிற்கு 7 பூட்டுகள் போட்டு பூட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த நபர் என்னை உள்ளே வைத்து பூட்டு போட்டது யார் என கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

இந்த தகவல் குறித்து அறிந்த ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் கேட்டில் பூட்டப்பட்டு இருந்த 7 பூட்டுகளையும் உடைத்து, வீட்டிற்குள் இருந்த நபர் அவரது தாய் மற்றும் 2 குழந்தைகள் என 4 பேரை மீட்டனர். பின்னர் சீட்டுப்பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் போலீசார் சமரசபேச்சு நடத்தி, ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்கும்போது நாங்கள் சீட்டு பணம் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகிறது.

எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் தற்போது கூட அந்த நபர் புதியதாக சொத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாங்கள் அவரது வீட்டுக்கு பூட்டு போட்டோம். மேலும், கடந்த 2022-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காதால் தான் இந்த முடிவுக்கு வந்தோம் என்றனர்.

அப்போது போலீசார், கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்து இருப்பதால், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் தான் புகார் செய்ய வேண்டும். வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு பொதுமக்களிடம் கூறிஅனுப்பி வைத்தனர்.

ஆரணியில் சீட்டு நடத்தி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டவரின் வீட்டிற்கு பூட்டுபோட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story