அ.ம.மு.க. கட்சி பிரமுகர் ஆந்திராவுக்கு கடத்தி கொலை

அ.ம.மு.க. கட்சி பிரமுகர் ஆந்திராவுக்கு கடத்தி கொலை
X
ஆரணியில் மாயமான அ.ம.மு.க.பிரமுகர் கூலிப்படையினரால் ஆந்திராவுக்கு கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (வயது 68). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் மாவட்ட அவை தலைவராக இருந்தார். இவரது மனைவி குமாரி. முன்னாள் நகர மன்ற உறுப்பினர்.

மேலும் இவருக்கு பாஸ்கர், சுரேஷ் என்ற 2 மகன்களும், பாரதி என்ற மகளும் உள்ளனர். கோதண்டம், பட்டு சேலை வியாபாரம் செய்து வந்தார். இந் நிலையில் தற்போது வியாபாரம் நலிவடைந்த நிலையில் வட்டி தொழில் செய்து வந்தார்.பணத்தை பல்வேறு இடங்களில் இழந்த நிலையில் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தொடர்ந்து தினமும் ஆரணி கோர்ட்டுக்கு சென்று வந்த நிலையில் கடந்த 5-ந் தேதி ஆரணியில் இருந்து செய்யாறுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அவர் தனது மோட்டார் சைக்கிளை ஆரணி காந்தி ரோட்டில் உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. அவரது செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்ததால் கோதண்டத்தை அவரது மகன்கள் பல இடங்களில் தேடினர்.

ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால் ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் கடந்த 7-ந் தேதி புகார் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஆனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அவரது குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் கோதண்டத்தை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரிக்க வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் தொடர்ந்து கோதண்டம் செல்போன் எண் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 6 மாத காலமாக அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு யார் யார் என்னென்ன பேசினார்கள் என்ற விவரங்களை சைபர் கிரைம் பிரிவு மூலமாக போலீசார் சேகரித்தனர். அதில் அகரம் கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரின் மகன் சரவணன் அதிக அளவில் உரையாடிக் கொண்டிருந்ததும் பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக தொடர்பு இருந்து வந்துள்ளதும் தெரிய வந்தது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கோதண்டம் கடந்த 5-ந் தேதியே ஆந்திர மாநிலத்தில் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது.

இது சம்பந்தமாக திருப்பதி நீதிமன்றத்திலும் கூலிப்படையைச் சேர்ந்த 2 நபர்கள் சரணடைந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் பணம் கொடுக்கல் வாங்கல்- சம்பந்தமாக சரவணன் அவரது நண்பர் ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவரின் மகன் குமரன் மற்றும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறினர். இதனிடையே கடந்த 7-ந் தேதி ஆந்திர மாநிலம் கந்தவாடி என்ற பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத பிணம் கிடந்துள்ளது. பிணத்தை கைப்பற்றி ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக தனிப்படை போலீசார் மருத்துவ குழுவினருடன் கோதண்டத்தின் உறவினர்களை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். கந்தவாடி பகுதியில் மீட்கப்பட்ட பிணம் கோதண்டம்தானா? அல்லது கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கோதண்டம் உடல் எந்த பகுதியில் உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சரவணன், குமரன் மற்றும் சிலரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
ai future project