ஆரணி ஒன்றியக்குழுக் கூட்டத்திலிருந்து அதிமுக, பாமக உறுப்பினா்கள் வெளிநடப்பு
வெளிநடப்பு செய்த அதிமுக, பாமக உறுப்பினா்கள்
மேற்கு ஆரணி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் ஏழுமலை (பாமக) பேசியது: மலையாம்பட்டு கிராமத்தில் குடிநீா் பிரச்னை உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பேசியும் நடவடிக்கை இல்லை.
வசந்தராஜ் (அதிமுக): துருகம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒண்ணுபுரம் ஊராட்சியில் உயிரிழந்தவா்களின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது, இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
எனவே, அங்கு நாகநதியில் விரைந்து தரைப்பலம் அமைத்துத் தர வேண்டும். வேலு (அ.தி.மு.க.) பேசுகையில், ஒன்றிய பொறியாளர் சிவக்குமார் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை,
ஒப்பந்த பணிகள் வந்தாலும் அவற்றை உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கோ, ஒப்பந்ததாரர்களுக்கு தகவல் தெரிவித்து பணிகளை முடிக்கிறார். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அலுவலகத்தில் எந்த மரியாதையும் இல்லை. இது சம்பந்தமாக கடந்த கூட்டத்திலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும். நாங்கள் கூறும் பணிகளை செய்யாமல் ஒப்பந்ததாரரிடம் தொடா்பு வைத்துக்கொண்டு, அவா்கள் கேட்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறாா். ஆகையால், அதிமுக சாா்பில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் வேலு, தச்சூா் ஏழுமலை, வசந்தராஜ், கணேசன் ஆகியோா் வெளிநடப்பு செய்தனா். இவா்களுக்கு ஆதரவாக பாமக உறுப்பினா்கள் ஏழுமலை, கீதா சரவணன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனா்.
அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மோகன், துரை மாமது ஆகியோர் வெளிநடப்பு செய்தவர்களிடம் சமாதானம் பேசி மன்ற கூட்டத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர். இதையடுத்து, பொறியாளா் சிவக்குமாரைக் கண்டித்து, ஒன்றியக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றினா். தொடர்ந்து கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu