லோக்சபா தேர்தலில் 50 ஆண்டுகளுக்கு பின் ஆரணியில் களம் இறங்கும் தி.மு.க.

லோக்சபா தேர்தலில் 50 ஆண்டுகளுக்கு பின் ஆரணியில் களம் இறங்கும் தி.மு.க.
X

ஆரணி திமுக வேட்பாளர் தரணி வேந்தன். 

50 ஆண்டுகளுக்கு பின் ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக தரணி வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

லோக்சபா தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களையும், வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று திமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். அதில் ஆரணி மக்களவைத் தொகுதிக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணி வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆரணி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளில் 12 வது தொகுதி ஆகும், இதில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளது. இதில் செஞ்சி, மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மக்களவைத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆரணி தொகுதியை திமுக கறாராக கேட்டு பெற்றதாக சொல்லப்படுகிறது.

வந்தவாசி தொகுதியாக இருந்தபோது, காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. 1962 ல் காங்கிரஸ் ஜெயராமன், 1967, 1971 ல் திமுக சார்பில் விஐடி விஸ்வநாதன், 1977ல் அதிமுக சார்பில் வேணுகோபால், 1980ல் காங்கிரஸ் பட்டுசாமி, 1984, 1989ல் காங்கிரஸ் பலராமன், 1991ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி, 1996ல் தமாகா பலராமன், 1998, 1999ல் பாமக துரை, 2004 ல் மதிமுக செஞ்சி.ராமச்சந்திரன் வெற்றி பெற்று எம்.பியாக இருந்தனர்.

தொகுதி பெயர் மாற்றம் ஏற்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் 2009 ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். 2014 ல் அதிமுகவை சேர்ந்த செஞ்சி.ஏழுமலை என்பவர் வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் 7 முறை காங்கிரஸ் தனித்து நின்றும், கூட்டணி வைத்தும் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறையும், அதிமுக இரண்டு முறையும், பாமக இரண்டு முறையும், தமாக, மதிமுக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

2004ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் வந்தவாசி தொகுதி கலைக்கப்பட்டு, ஆரணி தொகுதியாக மாற்றப்பட்டது. இருப்பினும் திமுக 1971க்கு பிறகு இங்கு வெற்றிபெறவே இல்லை. கிட்டத்தட்ட 53 ஆண்டுகள், அரை நூற்றாண்டு காலமாக இந்த தொகுதியில் திமுக வெற்றிபெறாதது, கட்சி தொண்டர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் ஆரணி தொகுதியின் நிர்வாகிகளுடன் திமுக தலைமை, அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஆலோசனையை மேற்கொண்டிருந்தது. அப்போது தொண்டர்கள் தங்களது எதிர்ப்பை, "கூட்டணி கட்சிகளுக்கு ஆரணி தொகுதி ஒதுக்கக்கூடாது" என கூறினார்களாம். இந்த விவகாரத்தை தலைமை சற்று சீரியஸாகவே அணுகியதாம்.

ஆரணி தற்போதைய எம்பி எம்.கே.விஷ்ணு பிரசாத் குறித்து சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எம்பிகள் குறித்த சர்வே முடிவிலும் எதுவும் இல்லையாம்.

50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரணி தொகுதியில் திமுகவுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருப்பதால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேட்பாளர் தரணி வேந்தன்

வேட்பாளர் தரணி வேந்தன் அவர்கள் 1965 ஆம் ஆண்டு பிறந்தவர் இவருக்கு மனைவி மற்றும் மகன் மகள் உள்ளனர்.

1986 முதல் உள்ளாட்சித் தலைவராகவும் ஒன்றிய குழு தலைவர் மற்றும் கவுன்சிலர் என 38 வருடங்கள் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் பல பொறுப்புகளை பதித்துள்ளார் கூட்டுறவு சங்க தலைவராக இரண்டு முறையும் ஒன்றிய செயலாளர் ஆக ஆறுமுறையும் மாவட்ட துணைச் செயலாளராக ஏழு வருடமும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் பால் கூட்டுறவு சங்க தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!