பிண அறையில் ஏ.சி. கருவி வசதி இல்லாத ஆரணி அரசு மருத்துவமனை

பிண அறையில் ஏ.சி. கருவி வசதி இல்லாத ஆரணி அரசு மருத்துவமனை
X

ஆரணி அரசு மருத்துவமனை வளாகம் (கோப்பு படம்).

ஆரணி அரசு மருத்துவமனை பிண அறையில் ஏசி கருவி வசதி இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆரணி அரசு மருத்துவமனை பிண அறையில் ஏ.சி. கருவி வசதி இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சித்தேரி ஊராட்சிக்குபட்ட லட்சுமி நகர் அண்ணா தெருவில் வசிப்பவர் ராஜசேகர், நெசவு தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30). இருவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்பு திருமணமானது. குழந்தை இல்லை.

இதனால் மனவருத்தத்தில் தம்பதியினர் இருந்தனர். இன்று மதியம் ராஜசேகர் வேலை சம்பந்தமாக வெளியே சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்து மகேஸ்வரி வீட்டில் கேனில் இருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்தார். மகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகேஸ்வரி துடிதுடித்து கருகி உயிரிழந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையொடுத்து ஆரணி அரசு மருத்துவமனை பிணவறையில் குளிரூட்டும் பெட்டி பழுதடைந்துள்ளதால் வேறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியில்லாத காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியவில்லை என இறந்த இளம்பெண்ணின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இறந்த பெண்ணின் சடலம் சுமார் 4 மணி நேரமாக கொண்டு வந்த அமரர் ஊர்தியில் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தபட்டு அவலமும் ஏற்பட்டது.

ஆரணி அரசு மருத்துவ மனையில் பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டி சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story