ஆரணி அருகே ஏரியில் 2.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு.. உடனடியாக அகற்ற ஆர்டிஓ உத்தரவு...
ஆரணியில் 3 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா மற்றும் ஆரணி நகர் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமிக்கு பொதுமக்கள் அளித்து இருந்தனர்.
அதன் அடிப்படையில் அதற்குரிய தகவல்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி உத்தரவிட்டார். மேலும், ஆரணி நகரில் காந்தி ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், கோட்டை மைதானம் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், நகராட்சி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் சூரியகுளம் எதிரே உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்ற நகராட்சி, நெடுஞ்சாலை துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி உத்தரவிட்டார்.
அப்போது, எஸ்.வி.நகரம் தடுப்பணையில் இருந்து காட்டேரியான் கால்வாய் பகுதி செல்லக்கூடிய நீர்நிலை புறம்போக்கில் நீண்ட காலமாக 3 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருந்தனர். அவர்களுக்கு இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலவசமாக வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்கப்படும் என்றும், எனவே, அந்த இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டார்.
மேலும், அவர்களுக்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக பசுமை வீடு கட்டித் தரவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 நபர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா நகல்களை வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி வழங்கினார்.
தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தில் திருமண மண்டபத்தின் பின் பகுதியில் உள்ள ஏரியில் 2.50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் பாதை சம்பந்தமாக ஆய்வு மேற்கொள்ளும் போது வரைபடத்தை பார்த்தபோது ஆக்கிரமிப்பில் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி உத்தரவிட்டார். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மார்ச் மாதம் 6 ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அப்போது, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பெருமாள், தாசில்தார் ஜெகதீசன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu