திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளி விழா
நாக வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்த பச்சையம்மன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளி விழா விமர்சையாக தொடங்கியது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்ன கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன், பழமை வாய்ந்த பச்சையம்மன் கோவில், இரட்டை காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம் ஏங்கி மாடவீதி வலம் வந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை நகரம் மன்னார்சாமி சமேத பச்சையம்மன் திருக்கோவிலில் ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு நேற்று இரவு பச்சையம்மன் நாக வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் தரிசனம் செய்தனர்.
ஆரணி
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி பெருவிழா தொடங்கியது.
இந்தக் கோயிலில் 51-ஆவது ஆண்டு ஆடிப் பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாலையில் 500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஆடி முதல் வெள்ளிக்கிழமை காலையில் பூங்கரகம் எடுத்தல், கூழ்வாா்த்தல் திருவிழா நடைபெற்றது. பொங்கல் வைத்து படையலிடுவா் வழிபட்டனர். பின்னா் இரவு 7 மணியளவில் நூதன புஷ பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.
சனிக்கிழமை இரவு கோட்டை மைதானத்தில் திரைப்பட இன்னிசை நடைபெறுகிறது. மின் விளக்குகளால் வேம்புலியம்மன், சிவன் பாா்வதி, வராகி அம்மன், பராசக்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு காலை 7 மணிக்கு அபிஷேகமும்,மாலை 6.30 மணிக்கு சிறப்பு வேப்பிலை அலங்காரம், குங்கும அர்ச்சனை,மற்றும் கனகாதார ஸ்தோத்திரம் பாராயணம் தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வாசவி அம்மனின் அருளை பெற்றனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே சு.பொலக்குணம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 12-ம் ஆண்டு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு மலர்மாலைகளால் அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கூழ்வார்த்தல், அம்மன் வீதி உலா நடந்தது.
இரவு கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியும், கோவில் முன்புறம் நாடகமும் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu