வந்தவாசி அருகே சுவா் இடிந்து விழுந்து காா் சேதம்

பலத்த மழையால், வேரோடு சாலையில் சாய்ந்த மரம்.
ஆரணி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரம் ஒன்று, வேரோடு சாலையில் சாய்ந்தது.
ஆரணி -வந்தவாசி சாலையில் உள்ள கல்லேரிப்பட்டு கூட்டுச் சாலைப் பகுதியில் இருந்த மரம் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், ஆரணியில் இருந்து வந்தவாசி செல்லும் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கன ரக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. மேலும், வந்தவாசியில் இருந்து ஆரணிக்கு வரும் வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருந்தன. இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அகற்றினா்.
சுவா் இடிந்து விழுந்ததில் காா் சேதம்
வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. சுட்டெரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. அப்போது சூறாவளி காற்றும் சுழன்று சுழன்று வீசியது. காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கோட்டைக்குள தெருவில் உள்ள காய்கறி வியாபாரி நிறுத்தியிருந்த கார் மீது மரம் மற்றும் சுற்றுச்சுவர் விழுந்ததில் கார் நொறுங்கியது.
அப்போது திடீரென மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி பறந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அப்புறப்படுத்தி காரை மீட்டனர்.
மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள பழமையான மரம் ஒன்று சாய்ந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தி சரிசெய்தனர் இதேபோல் வந்தவாசியை சுற்றியுள்ள அம்மையப்பட்டு, சத்தியா நகர், மும்முனி, பாதிரி, வெண்குன்றம், சென்னாவரம், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
போளூரில் 40.2 மில்லி மீட்டர் மழை
நேற்று இரவு முதல் அதிகாலை வரை திருவண்ணாமலை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக போளூரில் 40.2 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கலசபாக்கம் - 39, ஜமுனாமரத்தூர் - 38, செங்கம் - 24.6, திருவண்ணாமலை - 7.2, தண்டராம்பட்டு - 4.2, கீழ்பென்னாத்தூர் - 3. மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu