ஆரணி அருகே அடுத்தடுத்த வீடுகளில் வெளிப்புறமாக தாழிட்டு தொடர் திருட்டு
திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடுகளில் விசாரணை மேற்கொண்ட போலீசார்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள கொள்ளை மேடு பகுதியில் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அந்தப் பகுதியில் நேற்று இரவு திருடும் நோக்கத்தில் புகுந்த மா்ம நபா்கள், ஒரு வீட்டின் கதவை உடைக்கும் சப்தம் கேட்டு, மற்ற வீடுகளில் உள்ளவா்கள் விழித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அந்த வீடுகளின் கதவுகளை வெளிப்புறமாக தாழிட்டனா்.
இதைத் தொடா்ந்து, சரிதா என்பவா் வீட்டில் ஆள் இல்லை என்பதை தெரிந்த அந்த நபா்கள் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி மற்றும் ரூ. ஒரு லட்சத்தை திருடினா்.
மேலும், அடுத்த வீடான சிட்டாக்கு என்பவருடைய வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்து 5 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை திருடியுள்ளனர்.
தொடா்ந்து பழனி, மூா்த்தி, பரிமளா ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகளை திருடிக் கொண்டு வயல் பகுதி வழியாக தப்பிச் சென்றதாக தெரிகிறது . மொத்தம் 25 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலையில் திருட்டு குறித்த அறிந்த அப்பகுதி மக்கள், ஒருவருக்கொருவா் தகவல் கொடுத்து வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த தங்களது வீடுகளின் கதவுகளை திறக்கச் செய்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா்.
மேலும், சம்பவ இடத்துக்கு விரல் ரேகை நிபுணா் தேவிப்ரியா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடா்பாக கண்ணமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu