ஆரணியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ஆரணியில் நடந்த வாகன சோதனை (கோப்பு படம்).
குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் போலீசார் விதித்ததோடு டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்னல் வேகத்தில் வந்த டிராக்டரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் அதன் டிரைவர் நிறுத்தாமல் மேலும் வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது போலீசாரை மீறி மின்னல் வேகத்தில் டிராக்டர் வண்டி வீதியில் சென்றபோது அங்கு சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் டிராக்டரை துரத்திக் கொண்டு சென்று தடுத்து நிறுத்தினார்.
இதனையடுத்து போலீசார் டிராக்டர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டபோது புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்பதும் குடிபோதையில் டிராக்டரை இயக்கியதும் தெரிய வந்தது.
பின்னர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதற்காக ரூபாய் 10,000 விதித்தனர். மேலும் அவரிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை சமர்ப்பித்து விட்டு அபராத தொகையையும் கட்டிவிட்டு டிராக்டரை பெற்று செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
20 பேர் கைது
ஆரணி சரக போலீஸ் நிலை.ப்பகுதிகளில் 6 நாட்களாக நடைபெற்ற ரோந்து பணியின்போது தலைமறைவாக இருந்த 20 பேர் கைது செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி டவுன், தாலுகா, களம்பூர், கண்ணமங்கலம், சந்தவாசல், ஆரணி அனைத்து மகளிர் ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 19-ந் தேதி முதல் இன்று வரை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர்கள் கோகுல் ராஜன், புகழ், மகாலட்சுமி, அல்லிராணி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், ஷாபுதீன், முத்துலிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் கூறியதாவது:-
ரோந்து பணியின்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியது என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஆர்.எஸ். கருவி மூலமாக 770 நபர்களை புகைப்படம் எடுத்து அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரோந்து பணியில் பழைய குற்றவாளிகள், ரவுடிகள் 17 பேரும் பிடிபட்டனர். அவர்களை ஆரணி உதவி கலெக்டர் முன்பு ஆஜர் படுத்தி நன்னடத்தைச் சான்றுகள் பெறப்பட்டுள்ளது.
தலைமறைவாக இருந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் 55 பேரை பிடித்து கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu