குப்பைகளை அள்ள ரூ.5 லட்சம் வாடகையா? ஆரணி நகராட்சி கூட்டத்தில் விவாதம்
ஆரணியில் நடைபெற்ற நகரமன்ற கூட்டம்.
ரூ.6 லட்சத்தில் புதிய டிராக்டரே வாங்கிவிடலாம் என்ற நிலையில் 3 மாதத்துக்கு குப்பைகள் அள்ள டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வாடகையா?, என்று ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். ஆணையாளர் தமிழ்ச்செல்வி வரவேற்றார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் ஆணையாளர், தான் திண்டிவனம் நகராட்சிக்கு பதவி உயர்வு பெற்று மாறுதலாகி செல்ல இருப்பதால் கூட்டத்தை விரைந்து முடியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் பேசத் துவங்கினர்.
அப்போது அவர்கள் தெரிவிக்கையில், 15 ஆவது வார்டில் திருவிளக்குகளை சீரமைக்க வேண்டும், மாதந்தோறும் நகர மன்ற கூட்டத்தை நடத்த வேண்டும், நகராட்சியின் வரவு செலவு கணக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் சேதமடைந்த சாலைகளை கணக்கெடுத்து புதிய சாலைகளும் பக்க கால்வாய் இல்லாத பகுதிகளுக்கு புதிய கால்வாய்களும் அமைத்து தர வேண்டும், 2 வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களும் பேசினர்.
அப்போது திமுகவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் சுப்பிரமணி பேசுகையில், பொது சுகாதார பிரிவில் குப்பைகளை அள்ள வாகன பற்றாக்குறை உள்ளதால் தனியார் டிராக்டர் மூலம் குப்பைகளை அள்ள விலை புள்ளி கோரியதில் நாள் 1-க்கு டீசல், வாடகை, டிரைவர் படி உள்பட ரூ.6 ஆயிரம் என விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
டிராக்டர் வாடகைக்காக 3 மாத காலத்திற்கு ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் செலவு செய்ததாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய டிராக்டரின் விலையே ரூ.6 லட்சம் தான். டிரில்லருடன் ரூ.7 லட்சம் தான் ஆகிறது இதற்கு ஏன் வாடகைக்கு எடுத்து 3 மாதத்திற்கு செலவு செய்ய வேண்டும். என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஆணையாளர் குப்பை ஆங்காங்கே இருப்பதால் வாடகை எடுத்து செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.
மற்றொரு திமுக உறுப்பினர் பாபு பேசுகையில் 11-வது தீர்மானத்தில் ஓராண்டுக்கு ஆரணி நகரில் குப்பைகளை அள்ள ரூ.3 கோடியே 77 லட்சத்து 89 ஆயிரம் கணக்கீடு செய்யப்பட்டு தனியாருக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது அதன் முழு விவரம் யாருக்கும் தெரியாது. எனவே, அதன் விளக்கம் தர வேண்டும். பணியாளர்களை நியமனம் செய்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்தாலே இவ்வளவு தொகை செலவாகாது. என கேள்வி எழுப்பினார்
இதற்கு பதில் அளித்த ஆணையாளர் ஒரு நாள் குப்பைகள் கழிவு 21.46 டன் ஆகும். அதன் விவரத்தில் ஒரு நாளுக்கு 87 ஆயிரம் ரூபாய் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் இந்த தொகையினை தேர்வு செய்தீர்கள் என்ற முழு விவரத்தையும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவலாக தர வேண்டும்.
கூட்டம் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அதிக அளவில் கேள்விகளை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை எடுத்து நகர மன்ற தலைவர் மணி பேசும் போது இங்கு உறுப்பினர்கள் பேசிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.
பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆரணி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து திண்டிவனம் நகராட்சிக்கு பணியிட மாறுதலாகி செல்லும் ஆணையாளர் தமிழ்ச்செல்விக்கு நகர மன்ற தலைவர் நகர மன்ற துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் சொல்லி வழி அனுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu