மயான பாதைக்கு 22 பேர் நிலம் வழங்கியதால் முடிவுக்கு வந்த 30 ஆண்டு பிரச்சினை

மயான பாதைக்கு 22 பேர் நிலம் வழங்கியதால் முடிவுக்கு வந்த 30 ஆண்டு பிரச்சினை
X

புதிய மயான பாதை

 

மயான பாதைக்கு 22 விவசாயிகள் தங்கள் நிலத்தை தானமாக வழங்கியதையடுத்து 30 ஆண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

ஆரணியை அடுத்த அடையபுலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் யாராவது இறந்து விட்டால் உடலை தனியார் நிலத்தின் வழியாகத்தான் எடுத்துச்சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இது தொடர்பாக 30 வருடங்களாக பிரச்சினை இருந்து வந்தது.

அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு மயான பாதை பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் என உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி பஞ்சாட்சரம் (வயது 80) இறந்து விட்டார். அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்வதில் பாதை பிரச்சிைன இருந்தது. இதனையடுத்து அவர்கள் போராட்டம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

தகவல் அறிந்த ஆரணி தாசில்தார் பெருமாள், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இந்திராணி, இல. சீனிவாசன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் மற்றும் சர்வேயர்களுடன் அங்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து காலனி பகுதிைய சேர்ந்தவர்கள் மற்றும் நில உரிமையாளர்ளிடம் சமாதான கூட்டம் நடத்தினர்.

தற்போது மயான பாதைக்கு செல்லக்கூடிய நிலத்தில் பயிரிடாமல் உள்ளதால் சுமார் 22 விவசாயிகள் தங்களது நிலத்தை 3 மீட்டர் அகலத்திலும், 800 மீட்டர் நீளத்திற்கும் மயான பாதைக்காக தானம் செய்வதாக ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் மயானத்திற்கு பாதை உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறந்தவர் உடலை புதிய மயான பாதை வழியாக சுடுகாட்டிற்கு காலனி பகுதி மக்கள் எடுத்துச் சென்றனர். இதனையடுத்து 30 ஆண்டு கால பிரச்சினை நேற்றுடன் முடிவுக்கு வந்ததால் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!