ஆரணி அருகே கல்லூரி பேருந்து மீது லாரி மோதல்: 20 மாணவர்கள் காயம்

ஆரணி அருகே கல்லூரி பேருந்து மீது லாரி மோதல்: 20 மாணவர்கள் காயம்
X

லாரி மோதியதில் சேதமடைந்த கல்லூரி பேருந்து.

ஆரணி அருகே கல்லூரி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 20 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் இருந்து எஸ்.வி.நகரம், மாமண்டூர் வழியாக வாழைப்பந்தல் வரை கல்லூரி மாணவர்களை ஏற்றிச்செல்லும் கல்லூரி பஸ் மாணவர்களுடன், பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தது. அப்போது ஆற்காட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி திடீரென கல்லூரி பஸ் மீது மோதியது.

இதில் கல்லூரி பஸ்சின் பின்பகுதி சேதமடைந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்துள்ளனர். இதில் பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்த 20 மாணவ மாணவிகள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் பெருமாள், முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி, மண்டல துணை தாசில்தார் மோகனா, வருவாய் ஆய்வாளர் வேலுமணி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் காயமடைந்த மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வேறு பஸ்சில் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக ஆரணி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

Tags

Next Story