ஆரணி அருகே கல்குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

ஆரணி அருகே கல்குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவர்கள்  உயிரிழப்பு
X
ஆரணி தாலுகா களம்பூர் அருகே நண்பர்களுடன் குட்டையில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா களம்பூரை அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நோமிநாதன் (வயது 14). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சக்திவேல் (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தான். இவர்களும் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களான இம்ரான், ஜீவஜோதி, தாமரை ஆகியோரும் நண்பர்களாவர்.

இவர்களது ஊருக்கு அருகில் கீழ்ப்பட்டு கிராமத்தில் கல்குவாரி அருகே கரிகுன்று பகுதியில் குட்டை உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் குட்டையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. மாணவர்கள் 5 பேரும் அந்த குட்டைக்கு சென்று குளித்தனர். இதில் எதிர்பாராத விதமாக நோமிநாதன், சக்திவேல் ஆகிய இருவரும் குட்டையில் உள்ள சேற்றில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கியுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டு அருகில் இருந்த பொதுமக்களை அழைத்துள்ளனர். உடனே அங்கு வந்த பொதுமக்கள் சிறுவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். உடனே அங்கு வந்த 108 ஆம்புலன்சில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து பரிசோதனை செய்ததில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல் அறிந்து வந்த களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், எஸ்.ஐ. விநாய மூர்த்தி மற்றும் போலீசார் சிறுவர்கள் இரண்டு பேரின் உடலையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த சிறுவர்களின் பெற்றோர் களம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!