இரண்டு பெண் ஊராட்சி தலைவர்கள் நீக்கம்: திருவள்ளூர் ஆட்சியர் அதிரடி உத்தரவு
நீக்கம் செய்யப்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி தலைவி
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், கடம்பத்துார், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, எல்லாபுரம், பூண்டி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், பூந்தமல்லி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, சோழவரம், வில்லிவாக்கம் என, 14 ஊராட்சி ஒன்றியங்களில், 526 ஊராட்சிகளில், கடந்த, 2019ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளிட்ட கட்சியினர் தேர்தலை சந்தித்து, பலர் வெற்றி பெற்றனர்.
அரசியல் செல்வாக்கு கொண்ட பலரும், தங்களது மனைவி, மகள், அம்மா என பெண்களை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்தனர்.
திருவள்ளூர் ஒன்றியத்தில், காக்களூர் ஊராட்சி தலைவர் சுபத்ரா ராஜ்குமார், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி தலைவர் சுனிதா பாலயோகி, தாமரைப்பாக்கம் கீதா துளசிராமன் உள்ளிட்ட மகளிர் தலைவராக இருந்தும், அவர்களது கணவர் மற்றும் உறவினர் ஆண்களே தலைவர் போல் செயல்பட்டு வருகின்றனர்.
இதையறிந்து, புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், உள்ளாட்சி தலைவர்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதில், எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் ஊராட்சி தலைவர் கீதா துளசிராமன், 46, கடந்த 2020 - 22 ஆண்டு வரை பல்வேறு முறைகேடு செய்ததாக தெரிந்தது.
தணிக்கை அலுவலரின் ஆய்வில், கட்டட வரைபடம் அனுமதி வழங்கப்பட்டது, மின்விளக்குகள் உபகரணங்கள் வாங்கியது என, 40 லட்சம் ரூபாய் நிதியிழப்பு செய்தது கண்டறியப்பட்டது.
மேலும், அவரது கணவர் துளசிராமன் ஊராட்சி தலைவரின் இருக்கையில் அமர்ந்து கணக்கு வழக்குகள் பார்த்ததும், கோப்புகளில் கையொப்பமிட்டதும் தெரிந்தது.
இதே போல், கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி தலைவர் பா.ம.க., மாநில துணைப் பொதுச் செயலர் பாலயோகியின் மனைவி சுனிதா பாலயோகி, 43 அரசுக்கு வரவேண்டிய 19 லட்சத்து 42 ஆயிரத்து 171 ரூபாயினை அரசுக்கு செலுத்தாமல் நிதியிழப்பு செய்ததாக தெரிய வந்தது.
இதையடுத்து, இரண்டு ஊராட்சி பெண் தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அரசிதழில், 'தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 - பிரிவு 205 கீழ் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்யலாம் என, மாவட்ட ஆட்சியருக்கு தணிக்கை செய்த அதிகாரி அறிக்கை அளித்திருந்தார். தணிக்கை அதிகாரியால் ஊராட்சியில் கண்டறியப்பட்ட நிதியிழப்பு தொடர்பான ஆவணங்கள் அடிப்பபடையில் அவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெங்கத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் குறித்த புகார் அடிப்படையில், ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்த ராஜ்குமார் என்பவரும் பணியிடை நீக்தூகம் செய்யப்பட்டார். இதையடுத்து தொடுகாடு ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் பெருமாள் வெங்கத்தூர் ஊராட்சி செயலராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu