திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் பனி மூட்டம். சரக்கு வேன்கள் மோதி 5 பேர் படுகாயம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பனிப்பொழிவு
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது.
நேற்று இரவு முதலே கடுமையான பனிமூட்டம் சாலையே தெரியாத அளவுக்கு மறைத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
காலை 8 மணி வரை புகைமூட்டம் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. பல இடங்களில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் பனிமூட்டத்துடன் புகையும் சேர்ந்து காணப்பட்டது.
திருவள்ளூர் ரயில் நிலையம் பகுதியில் நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரயில்கள், அதே போல் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் சென்ற புறநகர் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன. இன்று காலை வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.
திருத்தணியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் திருத்தணிக்கு காய்கறி, கரும்புடன் சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. இதனை பாபு என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கடும் பனி மூட்டம் காரணமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தணியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி பாபு மீது சரக்கு வேன் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் பகுதிக்கு வெல்லம், வேர்க்கடலை, பருப்பு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சிங்காரவேலு என்பவரின் சரக்கு ஆட்டோமீது மோதியது.
இதில் 2 சரக்கு வாகனத்திலும் இருந்த பாபு, சூர்யா, வள்ளியம்மா, ஜெயலா, மற்றும் எதிரில் சரக்கு ஆட்டோவில் வந்த சிங்காரவேலன் ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருத்தணி, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மதுராந்தகம், மேல்மருவத்தூர், கருங்குழி, செய்யூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் அதிக அளவிலான குளிர் இருந்தது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள வாகனங்கள் வருவது கூட தெரியாததால் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி வாகனங்கள் சென்றன.
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. பழைய பக்கிங்காம் பாலத்தில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu