மீன் இறங்குதளத்தில் படகுகளை நிறுத்த முடியாமல் தவிப்பு!

மீன் இறங்குதளத்தில் படகுகளை நிறுத்த முடியாமல் தவிப்பு!
X
பழவேற்காடு ஏரி மீன் இறங்குதளம் பகுதிக்கு படகுகளை கொண்டு வருவதில் சிரமம் உள்ளதால் மண் குவியல்களை அகற்றி ஆழப்படுத்த கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரி அருகே, கடந்த, 2015ல், தமிழ்நாடு மீனவள துறை சார்பில், 1.32 கோடி ரூபாயில் மீன் இறங்குதளம் அமைக்கப்பட்டது. ஏரியை ஒட்டி, 200மீ. நீளத்திற்கு சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில், 80க்கும் அதிகமான படகுகளை நிறுத்துவதற்கு வசதியாக தளம் அமைந்திருந்தது.

கடல் மற்றும் ஏரியில் மீன்பிடித்து கரை திரும்பும் மீனவர்கள், இந்த சிமென்ட் தளம் அருகே படகுகளை கொண்டு வந்து நிறுத்தி படகில் இருந்து, மீன்பிடித்து வரப்பட்ட மீன்களை ஏலக்கூடம் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்வர்.

இந்நிலையில், ஏரியில் நீர்இருப்பு குறைந்து வருவதால், கரைப்பகுதிகளில் மண் திட்டுக்கள் அதிகரித்து உள்ளன. இதனால் இறங்குதளம் பகுதிக்கு படகுகளை கொண்டு வருவதில் மீனவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

கரைக்கு வரும் படகுகள் மண் குவியலில் சிக்கி, அதன் கீழ்ப்பகுதிகள் சேதமடைகின்றன. அதை தவிர்க்க ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரில் படகுகளை நிறுத்திவிட்டு, மீன் பெட்டிகளை தோளில் சுமந்து கரைக்கு கொண்டு வருகின்றனர்.

மண் திட்டுக்கள் அதிகரிப்பால் படகுகளை நிறுத்துவதற்கும் போதிய இடவசதியும் இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டு ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு நிற்கும் நிலை உள்ளது.

அடுத்த சில தினங்களால் ஆங்காங்கே தேங்கியிருக்கும் சிறிதளவு நீரும் வறண்டுவிடும் நிலையில், இனி மீன் இறங்குதளம் பகுதிக்கு படகுகள் வருவது முற்றிலும் தடைபடும் நிலை உள்ளது.

எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கான்கிரீட் தளத்தினை ஒட்டியுள்ள ஏரிப்பகுதி முழுதும், மண் குவிந்து கிடப்பதால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

ஆண்டுக்கு, பலகோடி ரூபாய் வருவாய் ஈட்டிதரும் மீனவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில், மீன்இறங்குதளம் பகுதியில் உள்ள ஏரியை ஆழப்படுத்தி படகுகள் எளிதாக வந்து செல்ல மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர் கூறுகையில்,கரைக்கு வரும் பெரும்பாலான பகுதிகளில் மண் திட்டுக்கள் அதிகரித்து உள்ளன. மண் குவியலால் படகுகளை இறங்குதளம் பகுதிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. சிறிது துாரத்தில் படகுகளை நிறுத்திவிட்டு வரவேண்டி உள்ளது.

மேலும் மண் திட்டுக்களால் ஏரியில் இருந்து நேரிடையாக இறங்குதளம் பகுதிக்கு வரமுடிவதில்லை. ஒரு கி.மீ., தொலைவு சுற்றிக்கொண்டு வருகிறோம். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. மண் குவியல்களை அகற்றி, ஆழப்படுத்திடவும், படகுகள் வருவதற்கு வழித்தடம் ஏற்படுத்திடவும் மீன்வளத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவதது: மீன்இறங்குதளம் பகுதியில் கோடைகாலத்தில் தண்ணீர் வற்றுவது வழக்கமான ஒன்றுதான். அங்கு துார்வாரி ஆழப்படுத்த முடியுமா என்பதை களஆய்வு மேற்கொள்ளப்படும். படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக கூனங்குப்பம், சாட்டன்குப்பம் ஆகிய இடங்களிலும், புதிதாக மீன்இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என்று தெரிவித்தார்

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு