பாசன நீரை திருடுவோர் மீது நடவடிக்கை : உடுமலையில் நாளை காத்திருப்பு போராட்டம்
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன நீரை திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரம்பிக்குளம்– ஆழியாறு செயற்பொறியாளர் அலுவலகம் முன் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதாக விவசாய சங்கம் அறிவித்து உள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பி.ஏ.பி விவசாயிகள் நலச்சங்கம், திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், வட்டமலை ஓடைக்கரை அணை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளதாவது: கடைமடைகளுக்கு பாசன நீர் வருவதில்லை, ஆயக்கட்டில் கடும் நீர் பற்றாக்குறை வருகிறது, வரும் குறைந்த அளவு நீரையும் தென்னை மட்டை ஆலை மற்றும் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் முக்கிய கால்வாய்க்கு இருபுறமும் பெரும் கிணறுகளை வெட்டி 25 குதிரை திறன், 50 குதிரை திறன் உள்ள நீர் இறைப்பான்களை பொருத்தி நீரை திருடிச்சென்று தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர்.இதனால், சராசரியாக ஆயக்கட்டு உழவர்கள் மூன்றில் ஒரு பங்கு நீர் உரிமையை இழந்து வருகிறார்கள்.
,நீண்ட காலமாக நடந்து வரும் இந்த நீர் திருட்டை தடுக்க கோரி, பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்துடைப்பு மட்டுமே நடக்கிறது, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு கோடி லிட்டர் முதல் 5 கோடி லிட்டர் வரையிலான அனுமதியற்ற நீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கிறது.
மேலும், நெகமம், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறி விவசாய நிலங்களில் தென்னை மட்டை மில் நடத்துவதாலும், கெமிக்கல் வாஷிங் செய்வதாலும் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மிகப்பெரிய அளவில் மாசுபட்டுள்ளது.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்கதையாகி போன இந்த சோகத்தை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரும் பொருட்டும், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆகஸ்ட் 15 அன்று( நாளை) உடுமலைப் பேட்டையில் உள்ள பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu