திருப்பூரில் செப்.5-இல் மராத்தான் ஓட்டம்: பாஜக.வினர் புகார் மனு
கொரோனா நேரத்தில் மராத்தான் போட்டி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக.,சார்பில் கலெக்டர் வினீத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூரில் செப்.5-ஆம் தேதி திமுக எம்எல்ஏ உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மராத்தான் ஓட்டம் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக.வினர் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட ஊடகப் பிரிவு சார்பாக, மாவட்ட தலைவர் செந்தில்வேல் வழிகாட்டுதலின் படி, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் நரேன் பாபு, மாவட்ட கலெக்டர் வினீத்திடம் அளித்த புகார் மனு: திருப்பூரில் செப் .5 -ஆம் தேதி காங்கேயம் சாலை, நல்லூரிலிருந்து வித்யா கார்த்திக் திருமண மண்டபம் வரையில், ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், மராத்தான் ஓட்டத்தை, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு, திருப்பூர் மாநகர காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் (குற்றம், போக்குவரத்து) சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்று கால பேரிடர் கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ள போது, இதற்கு அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது. அதிகாரிகள் பெயர்களை, அவர்களின் ஒப்புதலுடன்தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். அரசின் விதிமுறைகளை மீறி, இதில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல் உயர் அதிகாரிகளே சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பதும், இந்து மக்கள் பெரும்பான்மையாக கொண்டாடும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி மறுக்கும் அரசு, அதில் அங்கம் வகிக்கும், ஆளும் கட்சி எம்.எல்ஏ மற்றும் நடிகரின் நற்பணி மன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது, கட்டுப்பாடு விதி மீறலாகாதா. இதனால் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு பரவும் அபாயம் உள்ளது.
மேலும், அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்க விரும்பினால் ரூ.100-ம் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்க விரும்பினால் ரூ200-ம் செலுத்த வேண்டுமெனவும், அதற்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பொறுப்பிலுள்ள பெண் அதிகாரி, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன் (8883431329) மற்றும் சசிக்குமார் (9943853478) ஆகியோரை பொறுப்பாசிரியராக நியமித்தது எப்படி. இதற்கெல்லாம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி பெறப்பட்டதா. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, துறை சார்ந்த அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu