திருப்பூர் நொய்யலில் விடப்படும் சாயக்கழிவு: செத்து மிதக்கும் மீன்கள்

திருப்பூர் நொய்யலில் விடப்படும் சாயக்கழிவு: செத்து மிதக்கும் மீன்கள்
X

திருப்பூர் மாவட்டம், மங்கலம் அருகே அணைக்கட்டு பகுதியில், விதிகளுக்கு புறம்பாக திறந்து விடப்பட்ட சாயக்கழிவு நீரால், நொய்யல் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பால், மீன்கள் செத்து மிதக்கின்றன. இது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொத்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில், 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள், பிளிச்சிங், டையிங் பட்டறைகள் செயல்படுகின்றன. இவற்றில் சில, எவ்வித அனுமதியின்றி இயங்கி வருகின்றன. அதேபோல், சில சாயப்பட்டறை, பிளிச்சிங் பட்டறை உரிமையாளர்கள், விதிகளுக்கு புறமாக, சாயக்கழிவு நீரை நீர்நீலைகளில் விட்டு பாழ்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் விதிமீறல்கள் தொடர்கின்றன.

இவ்வாறு விதிகளுக்கு புறம்பாக திறக்கப்படும் சாயக்கழிவு நீரானது, நிலத்தடி நீரை பாதிப்பதுடன், ஆறு, வாய்க்காலில் கலந்து, நீர்நிலைகளையும் கடுமையாக மாசடைய செய்கிறது. இந்த தண்ணீரை குடிக்கும் மக்கள், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். சுற்றுப்பகுதிகளில் வசிப்போருக்கு, புற்றுநோய் போன்ற அபாயகரமான பாதிப்புகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என, பல்வேறு விவசாய அமைப்புகள், பொதுமக்கள் போராடி வந்தபோதும், இதற்கு நிரந்தரத்தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. சாயப்பட்டறை உரிமையாளர்கள் சிலர், மனசாட்சியே இல்லாமல், சுற்றுச்சுழலை மாசுபடுத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், மங்கலம் அருகே அணைக்கட்டு பகுதியிலும், இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்கதையாக உள்ளது. பொங்கையம்பாளையம் பகுதியில் உள்ள சில டையிங், பிளிச்சீங் பட்டறைகளில் இருந்து, இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இச்சம்பவம், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நொய்யல் கரையோரம் செயல்படும் பிளிச்சிங், டையிங் பட்டறைகளில் இருந்து இரவுநேரத்தில், ஆற்றில் சாயக்கழிவு திறந்து விடப்படுகிறது. மங்கலம் அருகே அணைக்கட்டு பகுதியில் திறக்கப்பட்ட சாயக்கழிவு நீரால், ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தாமதமின்றி ஆய்வு நடத்தி, சாயக்கழிவு நீரை கலக்கச்செயும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!