கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி, நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்த எம்பி கோரிக்கை
திருப்பூர் எம்பி சுப்புராயன்
திருப்பூர் எம்பி.,சுப்பராயன், மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்து உள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக இக்கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும்.
பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் மொழி பாகுபாட்டினை உடனடியாக சரி செய்து கூட்டாட்சி மற்றும் பன்முகத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை கட்டாய பாடமாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
மேலும், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படுகின்றது.
ஆனால்,தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்பிக்க இப்பள்ளிகளில் அளவீடாக குறைந்தது 20 மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக தேர்வு செய்தால் மட்டுமே தமிழைக் கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஒன்றிய அரசின் பாகுபாடான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த முறை உள்நோக்கத்தோடு பிரிவினை படுத்துவதாகவும், பாகுபாடுபடுத்த கூடியதாகவும் அமைந்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 49 பள்ளிகளில் 109 ஹிந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியர்களும் சமஸ்கிருத மொழியை கற்பிக்க 59 ஆசிரியர்களும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.
மக்களின் பேச்சுவழக்கில் இல்லாத முற்றிலும் வழக்கொழிந்து போன சமஸ்கிருத மொழியை பாதுகாக்க எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகளை, செம்மொழியான இந்தியாவின் பழமையான இலக்கியச் செறிவு மிக்க தமிழ் மொழியை இன்றுவரை ஏராளமான மக்களின் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் நடைமுறையிலுள்ள தமிழ் மொழியை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ் மொழியை புறந்தள்ளும் செயல்பாடுகளை முற்றாக களையவேண்டும். மேலும், இத்தகைய மொழிப் பாகுபாட்டு செயல்பாடுகள் ஒருவித ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
ஒன்றிய அரசின் இந்த மொழிப் பாகுபாடு நடவடிக்கைகளால் பல ஆண்டுகளாக தாய்மொழியில் உள்ள செழிப்பான அறிவினை பெறாத ஒரு தலைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
.இந்தியாவில் உள்ள மாநில மொழிகளையும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பது தேசிய ஒற்றுமைக்கும் பன்முகத்தன்மையை பலப்படுத்துவதாகவும் அமையும், இதுவே இந்தியாவின் தனித்துவம் ஆகும்.
, மத்திய அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கற்பிக்க உடனடியாக உத்தரவை பிறப்பித்து ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் மொழியை கற்க குறைந்தபட்சம் 20 மாணவர்கள் தமிழ் மொழியை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி உடனடியாக அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்க ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
செம்மொழியான தமிழ் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பாடத் திட்டத்தில் இணைப்பது மட்டுமில்லாமல் அனைத்து மாநில மொழிகளிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பாடத்திட்டத்தில் கற்பிக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும், என தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu