கடை உரிமையாளரை துப்பாக்கி காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் பறிப்பு; காரை நடுவழியில் நிறுத்திவிட்டு பணத்துடன் கும்பல் ‘எஸ்கேப்’
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், துப்பாக்கி காட்டி மிரட்டி கும்பல், பணம் பறித்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tirupur News,Tirupur News Today - திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஏராளமான சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புது மார்க்கெட் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் வடமாநிலங்களை சேர்ந்த பலர் பல்வேறு கடைகளை வைத்துள்ளனர். இதில் ராஜஸ்தானை சேர்ந்த அனுமத் சிங் (40) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்களான குக்கர், மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடைக்கு பொருட்கள் வாங்க 7 பேர் வந்துள்ளனர். திடீரென அந்த கும்பல் துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி, அனுமத் சிங்கை மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
தொடர்ந்து அவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் கடையில் வைத்திருந்த ரூ.16 லட்சம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை பறித்து கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில், காரில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அனுமத் சிங் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட கடை அமைந்துள்ள வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே கொள்ளை கும்பல் பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் பின்னே வந்த வாகனம், தங்களை பின் தொடர்ந்து வருவதாக எண்ணி சாலை ஓரம் காரை நிறுத்தி விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்க துவங்கி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூட துவங்கியது.
இதனால் பயந்து போன 7 பேரும், காரில் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு கடத்தலுக்கு பயன்படுத்திய காரை அதே இடத்தில் விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை கண்டுபிடித்த போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் காரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபோல் காரின் பதிவினை கொண்டு கார் உரிமையாளர் சக்திவேல் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் எப்போதும் பரபரப்பாக பொதுமக்கள் அதிக நடமாட்டம் இருக்கும் காமாட்சி அம்மன் கோவில் வீதியில், நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu