பல்லடத்தில் பெண் சிசு இறப்பில் சந்தேகம்- கொலையா என விசாரணை

பல்லடத்தில் பெண்  சிசு இறப்பில் சந்தேகம்-   கொலையா என விசாரணை
X

சித்தரிக்கப்பட்ட படம் 

பல்லடத்தில் பெண் சிசு இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளதால், கொலையா என குழந்தைகள் நல பாதுகாப்பு குழு விசாரணை செய்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். தனியார் பஸ் டிரைவர். இவர், 30 ஆண்டுகளாக பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியில் குடியிருந்து வருகிறார். உடுமலை சேர்ந்த தனலட்சுமி என்பவரை, 2016 ல் காதலித்து திருமணம் செய்தார்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தனலட்சுமி மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில், கடந்த 12 ம் தேதி பல்லடம் அரசு மருத்துவனையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடலில் ரத்த அளவு குறைவாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு சென்ற தனலட்சுமி, தனது கணவரை போன் மூலம் அழைத்துள்ளார். மருத்துவமனைக்கு எவ்வித தகவலும் அளிக்காமல், கணவருடன் பல்லடம் சென்று விட்டார். மருத்துவமனையில் தனலட்சுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், உடனடியாக பல்லடம் ஆரம்ப சுகாதார நிலை செவிலியர் மூலமாக வீட்டில் விசாரித்தனர்.

மருத்துவமனையில் இருக்க பிடிக்காததால், வந்து விட்டதாக தனலட்சுமி தெரிவித்து உள்ளார். குழந்தை குறித்து கேட்டபோது, மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் வெளியில் செல்ல அனுமதிக்கமாட்டார்கள் என எண்ணி,கட்டை பையில், துணிகளுக்கு இடையே குழந்தையை மறைத்து வந்ததாகவும், வீ்ட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தை இறந்து விட்டதாகவும், போலீஸ் விசாரணைக்கு பயந்து காளிவேலம்பட்டி பிரிவு அருகே குழித்தோண்டி புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தகவலை டாக்டரிடம் செவிலியர் தெரிவித்தார். குழந்தையை ஏன் எடுத்து சென்றனர். இறந்த குழந்தையின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் எதற்காக புதைத்தனர் என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனால் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரும், பல்லடம் போலீசாரும் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!