விவசாயிகளுக்கு 32 டன் உரம் இலவசமாக வழங்கிய வெள்ளகோவில் நகராட்சி

விவசாயிகளுக்கு 32 டன் உரம் இலவசமாக வழங்கிய வெள்ளகோவில் நகராட்சி
X

Tirupur News- வெள்ளகோவிலில் 32 டன் உரம், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது (கோப்பு படம்)

Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சி மக்கும் குப்பைகளிலிருந்து தயாரித்த 32 டன் உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது.

Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் நகராட்சி மக்கும் குப்பைகளிலிருந்து தயாரித்த 32 டன் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது.

நகராட்சியில் மொத்தம் 21 வாா்டுகள் உள்ளன. இவற்றில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு நாள்தோறும் நேரடியாகச் செல்லும் தூய்மைப் பணியாளா்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளைச் சேகரிக்கின்றனா். இவ்வாறு தினமும் 10.75 டன் மக்கும் குப்பைகள், 5.75 டன் மக்காத குப்பைகள் கிடைக்கின்றன.

மக்கும் குப்பைகள், அது சாா்ந்த உலா் கழிவுகள் மற்றும் காய்கறிகளின் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. நகராட்சி வாரச்சந்தையிலிருந்து அதிகளவு காய்கறிக் கழிவுகள் கிடைக்கின்றன. பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் இயந்திரங்களில் செறிவூட்டப்பட்டு சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களில் கிடைத்த மக்கும் குப்பைகளிலிருந்து 32.37 டன் உரம் தயாரிக்கப்பட்டது. இவை நேற்று (புதன்கிழமை) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா் ஆகியோா் கூறுகையில், மக்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுத்தால் உபயோகமாக இருக்கும். தயாரிக்கும் உரங்களை விவசாயிகள் இலவசமாக வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முயற்சிக்கு நகராட்சிகள் மண்டல இயக்குநா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா், என்றனா்.

விவசாயத்தில் மிக முக்கியத்துவம் பெற்றது இயற்கை உரங்கள்தான். இப்படி வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உரங்களை விவசாயிகளுக்கு பயன்படுத்த வழங்கியிருப்பது, பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை முன்னுதாரணமாக கொண்டு திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம், உடுமலை, காங்கயம் நகராட்சிகளிலும் இந்த முறையை பின்பற்ற முன்வர வேண்டும் என்பது மாவட்ட விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Tags

Next Story