வெள்ளக்கோவில்; கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி
Tirupur News. Tirupur News Today- கொரோனா தொற்று காரணமாக வெள்ளகோவில் பகுதியில், கிருமி நாசினி பவுடர் போடப்பட்டு வருகிறது.
Tirupur News. Tirupur News Today- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சொற்ப எண்ணிக்கையில் இருந்த தொற்று எண்ணிக்கை, கிடுகிடு உயரத் துவங்கியுள்ளது. இந்திய அளவில், ஆயிரக்கணக்கில் தினமும் தொற்று பன்மடங்காக அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலுக்கு கடிவாளம் போடும் வகையில், தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறிய பொதுமக்கள், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முககவசம் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக முககவசம் அணிவது மேலும் சில இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகர் பகுதியை சேர்ந்த 82 வயது முதியவருக்கு நேற்றுமுன்தினம் காலை காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்தது. உடனே அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருடைய சளி மாதிரியை பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் முதியவர் நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
கொரோனாவுக்கு பலியான முதியவரின் வீட்டைச் சுற்றி நகராட்சி சார்பில், பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணியை வெள்ளகோவில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். முதியவரின் மனைவியும் கொரோனா தொற்று காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழிப்புணர்வு முக்கியம்
திருப்பூர் பனியன் தொழில் நகரம்; வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் அதிகம். நெருக்கமான குடியிருப்புகளும் மிக அதிகம். புறநகர் பகுதிகளிலும். குடியிருப்புகள் பெருகி விட்டன. இந்நிலையில், கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே, தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். மேலும், பரவாமல் தடுக்க முடியும். குறிப்பாக நோய் எதிர்பாற்றல் குறைந்த குழந்தைகளும், முதியவர்களும், நோயாளிகளும் இந்த பாதிப்பில் இருந்து, தப்பிக்க விழிப்புணர்வுடன் செயல்படுவது முக்கியம்.
திருப்பூரில், பொது இடங்களுக்கு செல்வோர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கூட்டமான இடங்கள், நெரிசலான இடங்களில் சென்று வருவதை தவிர்ப்பதும் மிக முக்கியம். அதே போல், வெளியிடங்களுக்கு சென்று வருவோர், கைகளை சோப்பால் கழுவி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் அருகில் நீண்ட நேரம் இல்லாமல், பார்த்துக்கொள்ள வேண்டும்.
கடந்தமுறை கொரோனா தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்போது, மக்கள் முழு எச்சரிக்கையுடன் இருந்து பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியது போல், இந்த முறையும் பின்பற்றினால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். பரவும் தொற்றுகளின் எண்ணிக்கை மிக குறைவே என்ற அலட்சியமே, தொற்று மிக விரைவில் கணிசமாக அதிகரிக்க காரணம் என்பதை .உணர்ந்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இந்த விழிப்புணர்வை குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu