ஊதியூரில் வனத்துறைக்கு ‘பெப்பே’ காட்டும் சிறுத்தை; 25 நாட்களாகியும் பிடிக்க முடியலே...
tirupur News, tirupur News today- வனத்துறைக்கு ‘டிமிக்கி’ தரும் சிறுத்தை (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகியவற்றை கொன்று வனப்பகுதிக்குள் கொண்டு சென்று சாப்பிட்டு வருகிறது.
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகியவற்றை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த எந்தவித காட்சிகளும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை. சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள எந்த கூண்டிலும் சிறுத்தை சிக்கவில்லை. இருப்பினும் வனத்துறையினர் இடைவிடாது இரவு - பகலாக சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வனத்துறை வீரர்கள் வனப்பகுதியில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சிறுத்தை அடிக்கடி வந்து செல்லும் இடத்தை கண்டுபிடித்து அப்பகுதியில் கூண்டுகள் வைத்து பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு மாற்றி பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் இடத்தை விடுத்து, மற்ற இடங்களில் சுற்றி வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் உள்ளனர். மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி 25 நாட்களுக்கு மேலான நிலையில், ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறியதாவது,
சிறுத்தை வந்து போகும் இடங்களை ஆராய்ந்து கண்டறிந்து அப்பகுதியில் சுற்றிலும் கண்காணிப்பு வளையம் போடப்பட்டு, கூண்டு வைத்து அதில் உயிருடன் ஆடு மற்றும் நாயை பாதுகாப்பான முறையில் அடைத்து வைத்து பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும், கூண்டை சுற்றி வீசப்பட்ட இறைச்சி துண்டுகளை மட்டும் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து சாப்பிட்டு சென்றுள்ள கால்தடம் பதிந்துள்ளது.
ஆனால், கூண்டுக்குள் இருக்கும் இறைச்சி துண்டுகளை சாப்பிடாமல் சென்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது விரைவில் கூண்டுக்குள் இருக்கும் இறைச்சியை சிறுத்தை சாப்பிட வரும் போது கூண்டுக்குள் சிக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து பார்க்கும்போது சிறுத்தை, இன்னும் சில நாட்களில் சிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu