சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா; நிலையை அடைந்தது தேர்
Tirupur News- தைப்பூச தேர்த்திருவிழாவில், தேரோட்டம் நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலாகும்.
இந்த தலத்தில் மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.
சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது.
பெருமை மிகு சிறப்புகளும் பிரசித்தியும் பெற்ற சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இந்தாண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 26ம் தேதி துவங்கி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை தேர்வடம் பிடிக்கப்பட்டு பக்தர்களால் இழுக்கப்பட்டு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மாலை, பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டது. தேர் மலையை சுற்றி வந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது.
மூன்றாவது நாளான நேற்று மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் பங்கேற்று 'அரோகரா' கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். மாலை, 6:15 மணிக்கு தேர் நிலை அடைந்தது. இன்று காலை, கால்சந்தி மற்றும் பல்வேறு சமுதாய மக்களின் மண்டப அறக்கட்டளை நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu