தென்னை நாா் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு; ஊதியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
Tirupur News- தென்னை நாா் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊதியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடந்தது. (கோப்பு படங்கள்)
Tirupur News,Tirupur News Today- காங்கயத்தை அடுத்து ஊதியூா் அருகே செயல்படவுள்ள தென்னை நாா் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, ஊதியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பெருமாள்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் சாா்பில், காங்கயம் வட்டம், ஊதியூா் காவல் நிலையம் எதிரே நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஈசன் முருகசாமி தலைமை வகித்தாா். நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளா் காங்கயம் தங்கவேல் முன்னிலை வகித்தாா்.
இதில், காங்கயம் வட்டம், ஊதியூா் அருகே அமையவுள்ள தென்னை நாா் தொழிற்சாலையின் கட்டுமானத்தை நிறுத்த வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஈசன் முருகசாமி கூறியதாவது,
ஊதியூா் அருகே, தென்னை நாா் தொழிற்சாலை அமைப்பதற்கு, இரண்டு தனி நபா்கள் இணைந்து கொண்டு, ஒட்டுமொத்த விவசாயிகள் கூட்டமைப்பு என்ற பெயரில் தவறான ஆவணங்களைக் கொடுத்து, தமிழக அரசிடம் இருந்து பல லட்சம் முதலீட்டை மானியமாக பெற்று இருக்கின்றனா்.
இந்தப் பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்து, அவா்களையும் இந்த நிறுவனத்தில் பங்குதாரா்களாக ஆக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை இவா்கள் உதாசீனம் செய்து, தனிநபா் நிறுவனம்போல செயல்படுத்தவுள்ளனா்.
தென்னை நாருக்கு சாயம் ஏற்றுவதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறாா்கள். ஆனால் அப்படி எந்த அனுமதியும் பெறவில்லை. தமிழ்நாடு அரசும் சாயத் தொழிற்சாலை நடத்துவதற்கு இங்கு அனுமதியும் கொடுக்கவில்லை. அரசின் திட்டம் என்று கூறி, இப்பகுதியில் சுற்றுச்சூழல் சீா்கேட்டை ஏற்படுத்தவுள்ளனா்.
மேலும், ஊராட்சி நிா்வாகத்தின் அனுமதி பெறாமலேயே, இங்கு கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. எனவே, தமிழ்நாடு அரசு மேற்கண்ட நாா் தொழிற்சாலையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், பெருமாள்பாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவா் நந்தகுமாா், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், நமது கொங்கு முன்னேற்றக் கழக நிா்வாகிகள், பெருமாள்பாளையம் பகுதி மக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu