காங்கயத்தில், மூன்றரை வயது சிறுவன் மாயம்; போலீசார் தீவிர விசாரணை

காங்கயத்தில், மூன்றரை வயது சிறுவன் மாயம்; போலீசார் தீவிர விசாரணை
X

காணாமல் போன சிறுவன் ரிதன் (கோப்பு படம்)

காங்கயத்தில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது சிறுவனை காணவில்லை. சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதால் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஏ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் லாரி டிரைவர். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு மூன்றரை வயது மகன் ரிதன்.

நேற்று முன்தினம் மாலை, மஞ்சுளா தனது மகன் ரிதனுடன் அதே பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலை அவர்களது வீட்டிற்கு செல்ல புறப்படும் போது, வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ரிதனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அக்கம் பக்கத்தில் தேடினார். பலரிடமும் விசாரித்தார். ஆனாலும் சிறுவன் ரிதனை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை பல இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுவன் மாயமான சம்பவம் குறித்து காங்கயம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, காங்கயம் டிஎஸ்பி முத்துக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர், சிறுவன் காணாமல் போன இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அப்பகுதியில் உள்ள வீடுகள், தண்ணீர் தொட்டிகள், வீட்டின் மொட்டை மாடி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் தேடினர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்களும் இரவு முழுவதும் போலீசாருடன் இணைந்து காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் சிறுவனை தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் சிறுவனை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுவனை பற்றி அப்பகுதி பொதுமக்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தியும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் சிறுவனை தேடி வருகின்றனர். சிறுவனின் உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதியினர் சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் சிறுவனை பற்றி நேற்று மாலை வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது சிறுவன் ரிதன், திடீரென காணாமல் போனது காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென காணாமல் போக வாய்ப்பில்லை. யாரேனும் அழைத்துச்செல்லாமல், மூன்றரை வயது சிறுவனால், எங்கும் தனியாக சென்று இருக்க வாய்ப்பில்லை. எனவே, யாரேனும் திட்டமிட்டு, சிறுவன் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம், போலீசாருக்கு வலுத்துள்ளது. மேலும், முன்விரோதம் காரணமாக, யாரேனும் குழந்தையை கடத்தி இருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Next Story
அடுத்த புது மொபைல் வந்துருச்சு இத பாருங்க !!ரியல்மி 14X மொபைல் வரப்போகுது!