தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை கடும் வீழ்ச்சி

தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை கடும் வீழ்ச்சி
X

கொப்பரை விலையில் வீழ்ச்சி

தேங்காய் வரத்து அதிகரித்ததால், கொப்பரை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

காங்கயம் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. மேலும் 200-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலைகளும் செயல்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கொல்கத்தா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநில பகுதி தொழிலாளர்களும், தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்கின்றனர்.

இந்த களங்களுக்கு அந்தந்த பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளாவிலிருந்தும் தேங்காய் கொண்டு வரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இது தவிர ராஜஸ்தான், கேரளா, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில் எண்ணெயாக மாற்றப்படும் எண்ணெய், டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வட மாநில பகுதிகளான குஜராத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது. தேங்காய் உலர்களம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சை, மதுரை மற்றும் வட மாநிலங்களைச் சார்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் காங்கயம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொப்பரை தேங்காயின் விலை தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிலோ தேங்காய் பருப்பு ரூ.123 முதல் ரூ.127 வரை விற்பனையானது. அதன் பின்னர் தேங்காய் பருப்பு விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. நடப்பாண்டு மார்ச் மாதத்தில் கிலோ பருப்பு ரூ.89 வரை விற்பனையானது.

தொடர்ந்து கொப்பரை தேங்காயின் விலை குறைந்து கொண்டே வந்தது. குறிப்பாக ஜூன் மாதம் ரூ.82 ஆக இருந்த தேங்காய் பருப்பு விலை பின்னர் படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.77 ஆக உள்ளது. 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் ரூ.740 ஆக உள்ளது. இதனால் தோப்புகளில் தேங்காய்களின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆண்டின் துவக்கம் முதலே தேங்காய் வரத்து அதிகரித்ததன் காரணமாக மார்க்கெட்டில் பருப்பின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் வரத்து அதிகமாக இருந்ததாலும், தற்போது ராஜஸ்தான், கேரளா, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவாக உள்ளதாலும், தற்போது பருப்பின் விலை குறைந்துள்ளது. மேலும் வரும் ஓணம் பண்டிகையை ஒட்டி தேங்காய் எண்ணெய் விற்பனை அதிகரித்து, கொப்பரை தேங்காயின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால் கொப்பரை தேங்காயின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் அடுத்து ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் வருவதால் விலை உயர வாய்ப்புள்ளது. அதன் பின்னர் படிப்படியாக விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என, கொப்பரை வியாபாரிகள் கூறுகின்றனர்.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!