தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு மின் கட்டண உயர்வில் விலக்கு அளிக்க கோரிக்கை
தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு, மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மின்சாரம், கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்க தலைவர் தனபால் அனுப்பிய கோரிக்கை மனு:
காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம், 120 உறுப்பினர்களை கொண்டது. தேங்காய் எண்ணெய் உற்பத்தி தென்னை விவசாயத்தை சார்ந்து அதை ஊக்குவிக்கும் தொழிலாக உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு வியாபாரம் குறைந்துள்ளது. மேலும் வாராக்கடன்கள் அதிகரித்து தொழில் நலிவடைந்து வருகிறது.
தற்போதுள்ள சூழலில் தேங்காய் எண்ணெயின் விலையை விட, பாமாயில் எண்ணெய் விலை குறைவாக உள்ளது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெயை வாங்கி பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறு மின்சார கட்டணத்தை உயர்த்தும் போது, தேங்காய் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அரசு, பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் வினியோகம் செய்கிறது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டில் இருந்து பாமாயில் பயன்பாட்டிற்கு அதிகப்படியாக மாறி வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெய் வியாபாரம் குறைந்துள்ளது. தமிழக அரசு தேங்காய் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்து இத்தொழிலை ஊக்குவித்து வரும் இந்த வேளையில், தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அரவை கொப்பரையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் போது குறைவான விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய சூழ்நிலையால், தென்னை விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேங்காய் எண்ணெய் ஆலைகள் உபயோகித்து வரும் மின் இணைப்புகளுக்கு மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளது. எனவே தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு மின் கட்டணம் உயர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்குமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu