காங்கயத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
காங்கயத்தில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, சீர்வரிசைகளை வழங்கினார்.
காங்கயம், பழையகோட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், 80 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்க இயக்குனர் லட்சுமணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 80 கர்ப்பிணி பெண்களுக்கு, சீர்வரிசை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பில், 'போஷன் அபியான்' திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், சமுதாய வளைகாப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காங்கயம் வட்டாரத்தில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் ஐந்து வகை உணவுடன், மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் அரசு மருத்துவமனையில் பயன் பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம் சுகாதாரத்துறையின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1000 ரொக்கமும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்ப காலம் முன்பின் பராமரிப்பு குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள் குழந்தை வளர்ப்பு தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் குறித்து, கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் தீபா, காங்கயம் தி.மு.க நகரச் செயலாளர் வசந்தம் சேமலையப்பன், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu