கேரளாவில் அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய் ஆலைகள்; தமிழக உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்

கேரளாவில் அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய் ஆலைகள்; தமிழக உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்
X

Tirupur News,Tirupur News Today- தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவால், உற்பத்தியாளர்கள் கவலை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-கேரளாவில் தேங்காய் எண்ணெய் ஆலைகள் அதிகரித்து வருவதால், தமிழக உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- காங்கயம் பகுதியில் 450- க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. மேலும் 150-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்கின்றனர்.

இந்த களங்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளாவிலிருந்தும் தேங்காய் கொண்டுவரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடக்கின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கொப்பரை தேங்காயின் விலை அதிகரிக்கவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.85 முதல் ரூ.86 வரை விற்பனையானது. அதன் பின்னர் தேங்காய் பருப்பு விலை சற்றே குறையத் தொடங்கியது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.81 வரை விற்பனையானது. பின்னர் தொடர்ந்து கொப்பரை தேங்காயின் விலை ஏறாமல் குறைந்து கொண்டே வந்தது. தற்போது ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.74 ஆக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1,720 ஆக இருந்த 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் தற்போது ரூ.1,580 ஆக உள்ளது. இதனால் தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

இதுகுறித்து காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தனபால் கூறியதாவது,

சோயா எண்ணெய், பாமாயில் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை குறைந்ததால், தேங்காய் எண்ணெய்யின் விற்பனை குறைவானது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலை சரிந்துள்ளது. மேலும் தேங்காய் எண்ணெயை அதிக அளவில் உபயோகிக்கும் கேரளாவில் தற்போது தேங்காய் எண்ணெய் ஆலைகள் ஆங்காங்கே உருவாக்கி செயல்பட்டு வருகிறது. இதுவே தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவானதற்கு ஒரு காரணமாகும். தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிகரித்தால் மட்டுமே கொப்பரை தேங்காய் விலை உயரும். அந்த வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வினியோகம் செய்தால் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகரிக்கும். கொப்பரை தேங்காயின் விலையும் குறையாது. தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!