காங்கயத்தில் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத் தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை
Tirupur News- காங்கயத்தில் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
Tirupur News,Tirupur News Today- காங்கயத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியாதவது,
காங்கயம் வட்டம், குண்டடம் ஒன்றியம், வட்டமலை ஊராட்சிக்குள்பட்ட வடக்கு புதுப்பாளையம் கிராமம் அருகே அரசு கொடுத்த இலவச வீட்டுமனைப் பட்டா நிலத்தில் 15 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வீடுகட்டி குடியிருந்து வந்தோம். இந்நிலையில், கடந்த 2013 -ம் ஆண்டு அரசு வழங்கிய இலவச பட்டா நிலத்தை, தங்களது பட்டா நிலம் எனக் கூறி இதே கிராமத்தைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்துக்கொண்டனா். பின்னா், வீடுகள் இருந்த இடம் முழுவதும் கம்பி வேலி அமைத்து முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக அரசு வழங்கிய இடத்தை மீட்டுத்தரக் கோரி தொடா்ந்து போராடி வருகிறோம். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நாங்கள் கட்டி குடியிருந்த வீடுகள், கோயில் உள்ளிட்டவற்றையும் இடித்து விட்டனா்.
இதனால், சொந்த வீட்டை இழந்து தற்போது காங்கயம், முத்தூா், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம்.
நாங்கள் மேற்கண்ட பகுதியில் குடியிருந்ததற்கான அரசு அடையாள ஆவணங்களான ஆதாா் அட்டை, குடியிருப்புச் சான்று, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவையும் உள்ளன. எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காங்கயம் வருவாய் ஆய்வாளா் வி.ஜி.விதுா்வேந்தன் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் வருவாய் ஆய்வாளா் விதுா்வேந்தான் ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறை ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu