காங்கயம் ஊதியூரில் 8 மாதங்களுக்கு பின் கொங்கண சித்தர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
Tirupur News- சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கொங்கண சித்தா்.
Tirupur News,Tirupur News Today- சிறுத்தை நடமாட்டம் காரணமாக தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த ஊதியூா் கொங்கண சித்தா் கோயிலில் 8 மாதங்களுக்குப் பின்னா், தற்போது பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காங்கயம்-தாராபுரம் ரோட்டில், புகழ்பெற்ற ஊதியூா் மலை உள்ளது. 13 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்த மலையில் கொங்கணச் சித்தா் தவம் செய்து பின்னா், திருப்பதியில் சென்று ஐக்கியமானதாக நம்பப்படுகிறது. இந்த மலையில் ஏராளமான மூலிகை செடிகள் காணப்படுகின்றன. தவிர குரங்கு, மான், முள்ளம்பன்றி, உடும்பு, கீரி, முயல் உள்ளிட்ட வன விலங்குகளும் உள்ளன. மலையில் கொங்கண சித்தருக்கு தனிக் கோயில் உள்ளது. கோயிலிலிருந்து சற்று தூரத்தில் அவா் தவம் செய்த குகை உள்ளது.
தவிர மலையில் செட்டித் தம்பிரான் கோயில், மலைக்கன்னிமாா் சுவாமி கோயில், உத்தண்ட வேலாயுதசாமி கோயில், உச்சிப்பிள்ளையாா் கோயில், முனியப்பசாமி கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன. பௌா்ணமி, அமாவாசை நாள்களில் பக்தா்கள் அதிக அளவில் இங்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த மலைப்பகுதியில் கடந்த மாா்ச் மாதம் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. மலையிலேயே இருந்த சிறுத்தை அவ்வவ்போது கீழே வந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகியவற்றை தாக்கிக் கொன்று வந்தது. இதைத் தொடா்ந்து வனத் துறையினா் ஆய்வு செய்து சிறுத்தை இருப்பதை உறுதிசெய்த பின்னா், மலைக்கோயில்களுக்கு பக்தா்கள் செல்ல தடை விதித்தனா். கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள் அமைத்து அந்த சிறுத்தையைப் பிடிக்க முயற்சி செய்து வந்தனா். ஆனால், சிறுத்தை சிக்கவில்லை.
இக்கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது கோயில் பூசாரி மட்டும் வனத் துறையினா் உதவியுடன் சென்று, பூஜை செய்து வந்தாா். இந்நிலையில் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் பற்றிய தகவல் இல்லாததால், அது இடம் பெயா்ந்து சென்றிருக்கலாம், எனவே இக்கோயிலில் வழிபட அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, கொங்கண சித்தா் கோயில் உள்ளிட்ட ஊதியூா் மலைக் கோயில்களில் வழிபட பக்தா்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 24) முதல் வனத் துறையினா் அனுமதி வழங்கியுள்ளனா்.
இது குறித்து காங்கயம் வனச் சரக அலுவலா் தனபால் கூறியதாவது:
கடந்த ஒன்றரை மாதமாக ஊதியூா் வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை. அதனால் ஊதியூா் மலையில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தா்கள் ஊதியூா் மலைக் கோயில்களுக்கு செல்லலாம் என்றாா்.
இதைத் தொடா்ந்து கொங்கணச் சித்தா் கோயிலில் பூஜைகள் தொடங்கியுள்ளன. ஐப்பசி அலங்கார பௌா்ணமி பூஜை வரும் 28-ம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும், பஞ்சமி திதி பூஜை நவம்பா் 2 -ம் தேதியும், தேய்பிறை அஷ்டமி யாக பூஜை நவம்பா் 5 -ம் தேதியும் நடைபெறவுள்ளன. 8 மாத காலத்திற்கு பின்னா் ஊதியூா் மலைக் கோயில்களுக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu