‘கண்ணாமூச்சி’ காட்டி உலா வரும் சிறுத்தை; வனத்துறையினர் திணறல்

‘கண்ணாமூச்சி’ காட்டி உலா வரும் சிறுத்தை; வனத்துறையினர் திணறல்
X

Tirupur News,Tirupur News Today- ஊதியூரில், வனத்துறையினருக்கு பிடிபடாமல் ‘டிமிக்கி’ கொடுக்கும் சிறுத்தை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள ஊதியூர் வனப்பகுதியில் சில மாதங்களாக பதுங்கி இருக்கும் சிறுத்தை, இன்னும் பிடிபடாததால் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன், ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த ஒரு சிறுத்தை பதுங்கியிருந்து மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்தனர். அந்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதாக உறுதிப்படுத்தினர். இதனால் அச்சம் அடைந்த ஊதியூர் பகுதி மக்கள் சிறுத்தையின் தொடர் வேட்டையை கண்காணிக்க தாங்களாகவே முன்வந்து அவர்களது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கண்காணித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தினசரி கூண்டு இருக்கும் பகுதிக்கு வரும் சிறுத்தை உள்ளே ஆடுகளை பாதுகாப்பான முறையில் அடைத்து வைத்து இருப்பதை பார்த்து விட்டு செல்கிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க விடாமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மலையடிவார பகுதியில் வைக்கப்பட்ட கூண்டு ஒன்றை சுற்றிலும் சிறுத்தையின் கால்தடம் நேற்று முன்தினம் அதிகாலை பதிந்திருந்தது. இந்த கால்தடம் சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கூண்டை சுற்றிலும் உள்ள கால்தடத்தை பார்க்கும் போது, சிறுத்தை கூண்டை சுற்றிலும் வட்டமிட்டபடி வந்துள்ளது. ஆனால் கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது வனத்துறையினருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊதியூர் வனப்பகுதிக்குள் சிறுத்தை வந்து, ஏறக்குறைய 3 மாதங்கள் கடந்தும், இன்னும் சிறுத்தையை வனத்துறையினரால் பிடிக்க முடியவில்லை. அவர்கள் தரப்பில் செய்யும் பலவிதமான முயற்சிகளையும் முறியடித்து, சிறுத்தை அவர்களுக்கு பிடிபடாமல் ‘டிமிக்கி’ கொடுத்து வருகிறது. ஆடு, மாடு, நாய்கள் என தொடர்ந்து சிறுத்தை வேட்டையாடி வருவதால், மக்களின் அச்சமும் நீடித்து வருகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil