உடுமலை கிராமத்திற்குள் புகுந்த யானைகள் கூட்டம்: விவசாய நிலங்கள் சேதம்
பைல் படம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு, நீர் தேடி வன எல்லையிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. திருமூர்த்தி நகர், வலையபாளையம் கிராமங்களில் இரு குட்டிகளுடன் கூடிய 10 யானைகள் கொண்ட கூட்டம் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.
மேலும் மலையடிவாரத்தில் 1 கி.மீ., வரையில் 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களை உண்டதுடன் சோலார் மின் வேலிகளையும், நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின. யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையடுத்து உடுமலை வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வன எல்லை கிராமங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அகழி, சோலார் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குருமலை, மாவட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu