கிராம சபை கூட்டம்: 100 நாள் பணியாளர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாக புகார்
பைல் படம்.
காந்திஜெயந்தியை முன்னிட்டு அனைத்து பஞ்சாயத்துக்களிலும் கிராமசபைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குண்டடம் அடுத்துள்ள சடையபாளையம் பஞ்சாயத்துக்கான கிராமசபைக் கூட்டம் எரகாம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் குடிநீர், மின்விளக்கு, 100நாள் வேலை, தொகுப்பு வீடுகள் உள்ளிட்டவை பற்றி கேள்விகளை பொதுமக்கள் எழுப்பினர். இதில் பங்கேற்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி, சடையபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட மானூர்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் இடையூறு ஏற்படுவதாகவும் அதனால் அக்கடையை மூட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
அதற்கு பதிலளித்த பஞ்சாயத்து தலைவர், இந்த விசயத்தில் டாஸ்மாக் அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், பஞ்சாயத்தால் எதுவும் செய்ய முடியாது என கூறிவிட்டார். மேலும் செம்மேகவுண்டம்பாளையத்தில் கட்டாத தடுப்பணைக்கு ரூ. 6லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கப்பட்டுள்ளது என குற்றம்சட்டாட்டினார். அந்த பணம் எந்த கான்ட்ராக்டர் அக்கவுண்டிற்கு சென்றுள்ளது என கேட்டார். ஆனால் கடைசி வரை தலைவரோ, அதிகாரிகளோ அதற்கு பதிலளிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பெரியசாமி கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
இதுபோலவே நந்தவனம்பாளையம் பஞ்சாயத்திற்கான கிராமசபைக் கூட்டம், நந்தவனம்பாளையம் அரசு பள்ளி முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் தனசெல்வி தலைமை தாங்கினார். இதில் 100நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பஞ்சாயத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து டெம்போ வேன் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் கூறும்போது, கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால், அடுத்த 2வாரத்திற்கு 100நாள் வேலைக்கு வரமுடியாது என எச்சரிக்கை செய்ததால் இன்று வந்ததாக புகார் தெரிவித்தனர். இனி இதுபோல தவறு நடக்காமல் பார்த்துக்கொள்வதாக தலைவர் அவர்களை சமாதானப்படுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu