பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடர்பாக அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
அமைச்சர் சாமிநாதனிடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்த ஆவண செய்ய கோரி செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திலிருந்து 650 கோடி செலவில் ஒட்டன்சத்திரத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த 20-7-2021 பழநியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஏற்கனவே கடும் நீர் பற்றாக் குறை உள்ளதை உணர்ந்து தங்கள் பணிகளை ஆய்வு செய்தும் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
2.15 லட்சம் ஏக்கர் பாசன திட்டம் தற்போது 4.15 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டதால் ஆறுமாதத்திற்கு ஒரு மண்டலம் என நான்கு மண்டலங்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
பாசனப் பகுதிகள் நீர் பற்றாக்குறையால் கடும் வறட்சியில் உள்ளதால் பல லட்சம் தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் நிலவி வருகிறது.
ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்தியும், ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற ஆவண செய்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசன சட்டத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் ஜெயபால், நாச்சிமுத்து, உலகநாதன், ராமசாமி, ரஞ்சித் ஆகியோர் வலியுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu