தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக வேட்பாளர்! வழக்குப்பதிவு செய்த காவல்துறை

தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக வேட்பாளர்! வழக்குப்பதிவு செய்த காவல்துறை
X

தேர்தல் பறக்கும் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்

பணி செய்ய விடாமல் அதிகாரிகளைத் தடுத்ததாக பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா நடைபெறுவதைத் தடுக்க ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாகத் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லையில், முருகேசன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் புகழேந்தி, தலைமைக் காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருப்பூரில் இருந்து வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் காரை, கண்காணிப்பு நிலைக் குழுவினர் வாகன சோதனைக்காக நிறுத்தி உள்ளனர். அப்போது காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் கண்காணிப்பு நிலைக்குழுவைச் சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கோபமாகக் கேட்டார். அதைத்தொடர்ந்துகாவல் உதவி ஆய்வாளர் புகழேந்தியும் மற்ற காவலர்களும் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறவே, அவரது பெயரைக் கூறுமாறு வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டல் தொனியில் பேசினார்.

அப்போது அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாகக் கண்காணிப்பு நிலைக்குழுவினர் கூறியுள்ளனர். அதற்கு வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், மரியாதையாகப் பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வாக்குவாதம் முற்றியதையடுத்து அவர் கிளம்பி சென்றார்.

இந்த நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் குன்னத்தூர் காவல்துறையினர் பாஜக வேட்பாளர் மீது பணி செய்ய விடாமல் அதிகாரிகளைத் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!