விடுங்க கவலையை... அவினாசி மக்களுக்கு தினம் 120 லிட்டர் தண்ணீர்

விடுங்க கவலையை... அவினாசி மக்களுக்கு தினம் 120 லிட்டர் தண்ணீர்
X

புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அவிநாசி வார சந்தை பகுதியில் வைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் 

புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், அவினாசி பேரூராட்சியில், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 120 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என, எதிர்பர்க்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில்; அவினாசி பேரூராட்சி, பல்லடம்; கோவை மாவட்டத்தில் மோப்பிரிபாளையம், சூலுார் விமானபடைத்தளம் மற்றும், திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள ஊரக குடியிருப்புகளை உள்ளடக்கி, பவானி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்டு, 241 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படும் என, கடந்த 2015– 20-16ல் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு, அக்டோபர் 4ம் தேதி, அவினாசி - சேவூர் ரோட்டில் உள்ள சூளை பகுதியில், இத்திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்தாண்டு பிப்ரவரி மாதமே பணிகள் முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் குறுக்கிட்டதால், பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்

இதில், அவினாசி பேரூராட்சியில், இத்திட்டப்பணி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திட்டப்பணியை, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், பேரூராட்சி பகுதியில் வ.உ.சி பூங்காவில் 3.27 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, காமராஜ் நகரில் 2 லட்சம் லிட்டர், கைகாட்டிபுதுார் வாரச்சந்தையில் ஒரு லட்சம் லிட்டர், சீனிவாசபுரத்தில் 1.30 லட்சம் லிட்டர், ராயம்பாளையத்தில் ஒரு லட்சம் லிட்டர் என, மொத்தம், 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி.

அத்துடன், வ.உ.சி., பூங்கா பகுதியில், 2 லட்சம் லிட்டர், வாரச்சந்தை பகுதியில் 62 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. நகர எல்லைக்குட்டப்பட்ட பகுதியில், 16 கி.மீ., துாரத்துக்கு குடிநீர் குழாய்களும் பதிக்கப்பட்டன.


புதிய இணைப்புகள் கிடைக்கும்

இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், தினமும், 35 லட்சம் லிட்டர் தண்ணீர், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வினியோகிக்கப்படும். இதனால், 4 நாட்களுக்கு ஒருமுறை, சுழற்சி அடிப்படையில் மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க முடியும். தினமும், ஒரு நபருக்கு 120 லிட்டர் தண்ணீர் வழங்கும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவினாசி பேரூராட்சியில், 11,207 வரி விதிப்பு கட்டுமானங்கள் (வீடு, வணிக நிறுவனங்கள்) உள்ளன. இதில், ஏற்கனவே, 7,401 குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ், 522 இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், பேரூராட்சி எல்லைக்குள், 250 வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 150 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 60 பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. புதிய குழாய் இணைப்பு வேண்டுவோர், நேரடியாக பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதன்மூலம், அவினாசி பேரூராட்சிக்குட்பட்ட மக்களுக்கு, வருங்காலங்களில் தண்ணீர் பிரச்சனை தீரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

நீங்கள் அவிநாசி தொகுதியை சேர்ந்தவரா? நமது தொகுதி செய்திகளை அறிந்து கொள்ள: https://www.watsapp.news/AN என்ற லிங்க் வாயிலாக இணையலாம். Telegram: https://t.me/CityTirupur, Instagram: https://www.instagram.com/instanews.citytirupur/

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!