கனமழை காரணமாக ஆம்பூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
அருவியில் உற்சாக குளியல் போடும் இளைஞர்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழைப் பொழிவால், ஆம்பூர் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கானாறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் கசிவு நீர்க் குட்டைகள் நிரம்பி வருகின்றன.
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது மத்தூர் கொல்லை. இந்த ஊருக்கு மேற்கே நந்திசுனை பகுதியில் தேவுடு கானாறு ஓடுகிறது. ஆந்திர மாநிலத்தின் கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகளிலும், ஆம்பூர் வனசரக காப்பு காடுகளிலும் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் இந்த தேவுடு கானாற்றில் இப்போது நீர் வர துவங்கியுள்ளது. இந்த தேவுடு கானாற்றில் நந்திசுனை நீர்வீழ்ச்சி, குரங்கு பாறை நீர்வீழ்ச்சி, குதிரைப்பாறை நீர்வீழ்ச்சி, வனத்துறையினர் கட்டியுள்ள தடுப்பணை நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளில் குளிக்க ஆம்பூர் , வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இப்போது படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர்.
இப்போது புளியன் சுனை நீர்வீழ்ச்சியில் அதிக அளவில் நீர் வரத்து துவங்கியுள்ளது. இந்த புளியன்சுனை நீர்வீழ்ச்சியில் குளிக்க இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். மூலிகை மணத்தோடும் , இந்த புளியன்சுனை அருவியில் கொட்டும் தண்ணீர் பால் போல தூய்மையாக இருப்பதாலும் இங்கு இளைஞர்கள் அதிகமாக வரத் துவங்கியுள்ளனர். வனத்துறையினர் இங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் இளைஞர்கள் ஏமாற்றத்துடன் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu