ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது டேங்கர் லாரி மோதி விபத்து

ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது டேங்கர் லாரி மோதி விபத்து
X

விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி.

ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் காயம் அடைந்தனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து ஆம்பூருக்கு தினமும் காலை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை ஒடுகத்தூரில் இருந்து ஆம்பூர் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என 50-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி அரசு டவுன் பஸ் புறப்பட்டது..

இந்த நிலையில் பச்சகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருப்பூருக்கு சென்ற டேங்கர் லாரி அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றது.

எதிர்பாராத விதமாக அரசு பஸ்சின் பக்கவாட்டில் டேங்கர் லாரி உரசியபடி சென்றது. இதனால் அரசு பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

பேருந்தில் இருந்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story