ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்

தற்போது வரை ஆலை மூடப்பட்டு இருப்பதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவை தொடங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு அரவையை தொடங்குவதற்கு ஆலையை புனரமைக்க 10 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துத்து தலைமை வகித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் பேசியதாவது: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் 62 ஏக்கரில் அமைந்துள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை1960 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் துவக்கப்பட்டது.

இந்த ஆலைக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் கரும்பு அரவை காலங்களில், அரவை செய்து கொண்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் கொண்டுவரும் கரும்புகளை வேறு பகுதியில் உள்ள கூட்டுறவு ஆலைகளுக்கு அனுப்பி வைத்து அரவை பருவம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில், தற்போது வரை ஆலை மூடப்பட்டு இருப்பதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான தரணி ஆலையில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பு கொண்டு வருவதன் மூலம், ஒரு லட்சம் டன் கரும்பு இந்த ஆண்டுக்கான அரவையை தொடங்கிட மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆலையை புணரமைக்க 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிடவும், வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில், குறிப்பிட்ட தொகையினை தீபாவளி பண்டிகைக்காக வழங்கிட வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

Tags

Next Story