ஆம்பூர்: தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி; 2 பேர் கவலைக்கிடம்
விஷவாயு தாக்கி உயிரிழந்த ஊழியர் ரமேஷ்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 22 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை பணிக்கு வந்த புத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் ஆகியோருடன் மோதக பள்ளிப் பகுதியைச் சேர்ந்த பிரசாத் என 3 பேரும் தோல் தொழிற்சாலையில் உள்ள தோல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரமேஷ் என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார் அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததைக் கண்டு ரத்தினம் மற்றும் பிரசாத் ஆகியோர் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் மூன்று பேரையும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்து உள்ளனர்.
உடனடியாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் சக ஊழியர்கள் அவர்களை மீட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அப்போது மூன்று பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ரமேஷ் உயிரிழந்து விட்டதாகவும், ரத்தினம் மற்றும் பிரசாத் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தொழிற்சாலை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் கவலைக்கிடமான நிலையில் உள்ள ரத்தினம் என்பவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu