ஆம்பூர் அருகே தனி நபர் ஆக்கிரமித்த இடத்தை மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பேரனாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதிகளில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாக குடிநீர் தேக்க தொட்டி அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, கிராம மக்கள் சார்பில் அரசுக்கு சொந்தமான காலி இடம் ஒன்றை தேர்வு செய்து அந்த இடத்தில் குடிநீர் தேக்க தொட்டி அமைத்து தருமாறு கடந்த ஆண்டே அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் பரிந்துரை செய்த இடத்தில் குடிநீர் தேக்க தொட்டி தற்போது வரை அமைக்காமல் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதற்கிடையே குடிநீர் தேக்க தொட்டி அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை அதே பகுதியை சேர்ந்த (சரவணன்) தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அந்தக் இடத்தில் கொட்டகை அமைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கவும், அரசு இடத்தில் அவர் கட்டியுள்ள மாட்டுக்கொட்டகை நீக்கி குடிநீர் தொட்டி அமைத்து தருமாறும் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்ப்படவில்லை. இதுகுறித்து நியாயம் கேட்க வரும் பொதுமக்களை பேரணாம்பட்டு வட்டாட்சியர் கோபிநாத், அந்த இடத்தில் உள்ள கொட்டகையை அகற்றினால் சுற்றியுள்ள 20 குடியிருப்புகளையும் அகற்ற கூடிய நிலை ஏற்படுமென மிரட்டுவதாக கூறினர்.
இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்களை சமாதனம் செய்த அதிகாரிகள் ஓரிரு நாட்களில் கொட்டகையை அகற்றி குடிநீர் தேக்க தொட்டி அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளனர்
இந்த நிலையில் 2 நாட்களுக்கு மேலாகியும் தனிநபர் ஆக்கிரமித்துள்ள கொட்டகையை அகற்றாமல் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் பேர்னாம்பட்டு வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர்.
ஆனால் பொதுமக்கள் அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் உமராபாத் , ஆம்பூர் பகுதிகளில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரம் நீடித்த போராட்டத்திற்கு பிறகு ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள தனிநபரின் மாட்டுக் கொட்டகை அகற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.
சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த தர்ணா போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu